ஹஜ் ஒரு நேர்முக வர்ணனை 1

தல்பிய்யா முழக்கம்!

லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல் முல்க் லாஷரீக்க லக்.
———————————————————
சமத்துவ மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் ஓர் உலக மார்க்கம். இதன் அனைத்து வணக்க வழிபாடுகளும் உலகளாவிய அளவில் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதாக இருக்கும். திருமறை குர்ஆனின் போதனைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் செயல் பாடுகளும் இந்த இனிய மார்க்கத்தின் வழிகாட்டிகள்.
இந்த இனிய இஸ்லாம் இவ்வுலகிற்கு சமத்துவத்தைத் தந்தது. சகோதரத்துவத்தை போதித்தது. முழு மனித சமுதாயத்தையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும் உன்னத வழியைக் காட்டியது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை, வெறும் குனிதலையும், சிரம் பணிதலையும், உதட்டளவில் மந்திரங்கள் மொழிவதையும், கொண்ட சடங்கு அல்ல. நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம், படைத்த இறைவனை வணங்க பள்ளிவாசலில் ஒன்று கூடும்போது – அங்கு ஏழை, செல்வந்தன் என்னும் ஏற்றத் தாழ்வு களையப் படுகின்றது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் வேற்றுமை வேரறுக்கப் படுகின்றது. முதலில் வந்தவர் முதலில். அடுத்தடுத்து வந்தவர் அடுத்தடுத்த வரிசைகளில். அரசனும் ஆண்டியும் அருகருகில். அவரவர் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் ஒன்று கூடும்போது அங்கே ஒரு சமத்துவம்.வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைத் தொழுகையில் ஊரே ஒன்று கூடும்போது அதைவிட சற்று அதிக சமத்துவம்.ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்காவின் அரபாத் பெருவெளியில், உலக முஸ்லிம்கள் ஒன்று திரளும்போது மாபெரும் சமத்துவம். இதைவிடப் பெரிய சமத்துவம் இப்பாருலகில் வேறு எங்குமே இல்லை.வேறு எதுவுமே இல்லை. இது தான் ஹஜ்.
இனத்தால், குலத்தால், நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால், பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால், வேறு பட்ட அனைவரும்,ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, ஒரே உடை அணிந்து, ஒரே மறையைப் பின்பற்றி, ஒரே இறையை இறைஞ்சும் உன்னதப் பண்பாடு.
இது தான் ஹஜ்.
உலகின் அனைத்து கண்டங்களும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து நாடுகளும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து மொழிகளும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து நிறங்களும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து மனிதர்களும் இங்கே சரிசமம்.
ஆம் இது தான் ஹஜ்.
புண்ணிய சீலர்கள் வருகை
மக்காவில் ‘கஃபா’ என்னும் புனித இறையாலயத்தை இறைவனின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் அருமந்த மைந்தர், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் புணர் நிர்மாணம் செய்து முடித்த போது, புனித ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு வருமாறு மக்களை அழைக்கும் படி, இறைவன் கூறினான்.
‘மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் உம்மிடம் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்’ என்று கூறினோம். (திருக் குர்ஆன் 22 27)
நடந்தும், ஒட்டகங்களில் சவாரி செய்தும் வந்திறங்கிய காலம் போக- இப்போது- கார்களிலும் பஸ்களிலும் தரை மார்க்கமாக-கப்பல்களில் கடல் மார்க்கமாக- விமானங்களில் ஆகாய மார்க்கமாக-புனித ஹஜ்ஜை நிறைவேற்ற, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின் விருந்தினர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போகின்றது.ஜித்தா ‘இஸ்லாமியத் துறைமுகம்’ கப்பல்களால் நிரம்பி வழிகின்றது. தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என வியக்கும் வண்ணம், பெரும் பெரும் கப்பல்களில் புண்ணிய சீலர்கள் வந்திறங்குகின்றனர்.ஜித்தா, மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான தளத்தில், ஆகா! இவையென்ன? பறவைகளின் அணிவகுப்பா? இல்லை இல்லை. பறந்து வந்த விமானங்களின் அணிவகுப்பு.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிலிருந்து –
ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து –
காணும் இடமெல்லாம் காடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவிலிருந்து –
காரல் மர்hக்ஸின் சித்தாந்தக் கற்பனையில் மூழ்கிப்போன கம்யூனிஸ தேசங்களிலிருந்து –
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியாவிலிருந்து
மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவிலிருந்து –
செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து –
இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து –
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து-
பச்சைப் பிறைக் கொடி பாகிஸ்தானிலிருந்து –
பங்காளி நாடாம் வங்காள தேசத்திலிருந்து -இன்னும் இவை போன்ற எண்ணற்ற தேசங்களிலிருந்து -வண்ண வண்ணப் பறவைகளாய் வானவெளிப் பாதையில் பறந்து வந்த விமானங்களிலிருந்து – இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திறங்குகின்றனர்
திக்கெட்டும் தல்பிய்யா முழக்கம்
செங்கடலின் மணமகள்’ என வார்த்தைகளால் வர்ணிக்கப் படும் ஜித்தா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் வந்திறங்கிய ஹாஜிகள், பயணக் களைப்புத் தீரச் சற்று ஓய்வெடுத்து விட்டு, புனித மக்காவை நோக்கி பயணிக்கின்றனர்.
ஜித்தாவுக்கும் புனித மக்காவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 65 கிலோ மீட்டர். அகன்று விரிந்த அதிவிரைவுச் சாலைகளில் கார்களும் பஸ்களும் சீறிப் பாய்கின்றன.அண்டை நாடுகளாம் அரபு நாடுகளின் அனைத்து சாலைகளும் மக்காவை நோக்கி! அகன்ற சாலைகளில் அணி அணியாக வந்துக் கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் மக்காவை நோக்கி!தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் – அலை கடலெனத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற ஹாஜிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், கூடிக் கொண்டே போகின்றது. நூறுகள் ஆயிரங்களாக, ஆயிரங்கள் இலட்சங்களாக, கணிப் பொறியின் கணக்கு கூடிக் கொண்டே போகின்றது. அத்தனை இலட்சம் பேரையும் ஆண்டு தோறும் அரவணைக்கின்றது மக்கத் திரு நகரம்.
அனைவரின் இதயங்களிலும் ஆண்டவனின் பக்தி!அனைவரின் முகங்களிலும் ஹஜ் செய்யும் மகிழ்ச்சி!அனைவரின் நாவுகளிலும் தல்பிய்யா என்னும் மந்திரம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த- வந் நிஃமத்த லக வல் முல்க்லா ஷரீக்க லக்
என்பது நபி (ஸல்) அவர்களின் தல்பிய்யாவாக இருந்தது.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (755)
இலட்சக் கணக்கான ஹாஜிகளின் திரு வாய்கள் அனைத்தும், இரவும் பகலும், இருபத்து நான்கு மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கும் மூல மந்திரத்தின் பொருள் இது தான்.
வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன் இறைவா!உனக்கு நிகரானவர் எவருமில்லைஅருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!உனக்கு நிகரானவர் எவருமில்லை.
ஆகா! இந்தத் தாரக மந்திரத்தை ஹாஜிகள் உச்சரிக்கும் போது அவர்களின் உள்ளங்கள் குளிர்கின்றன. கேட்கும் போது நம் செவிகள் குளிர்கின்றன.ஒரு முறையா? இரு முறையா? ஓராயிரம் முறையா? இல்லை. இதற்கு எண்ணிக்கையே இல்லை. புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து, பகலிலும், இரவிலும், காலையிலும், மாலையிலும், நிற்கும் போதும் நடக்கும் போதும் வாய் மொழிகின்றது. உறங்கும் போது கூட உள்ளங்கள் மொழிகின்றனவோ?
அவரவர் இல்லங்களிலிருந்து, புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது முதல் மொழியத் தொடங்கிய ‘தல்பிய்யா’ முழக்கம், புனித மக்காவுக்கு வருகின்ற வழி நெடுகிலும், வந்து சேர்ந்த பின்னரும், புனித ஹஜ்ஜின் புண்ணியத் தலங்கள் முழுவதும், எட்டுத் திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.
———————
வர்ணனை தொடரும் இன்ஷா அல்லாஹ்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: