ரியாத் மாநகரில் கோடையிலும் ஒரு குளுமை

 

தஃபர்ரஜ் அமைப்பினர் நடத்திய கோடைச்சந்திப்பு 2008 ரியாத்தில் கடந்த 23 மே 2008ல் நதா & முஸ்திஷ்மார் ஓய்வில்லங்களில் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 நீச்சல் விளையாட்டுகள், வாலிபால், ஊமை விளையாட்டு (Dump Charades), இஸ்லாமிய வினாடி வினா, இஸ்லாமிய பாடல், கவிதைகள், உறியடி எய்மிங், விளம்பரதாரர் நிகழ்ச்சி :-)), குழந்தைகளுக்கான Mom & Me  என்று கலவையான; பொழுதுபோக்கும் அம்சங்கள் நிரம்பியிருந்தாலும், சகோ. கஸ்ஸாலி அவர்களின்குர்ஆனை அணுகும் முறை  பற்றிய பயிற்சியும், சிந்தனையைத் தூண்டிய பேராசியர். அப்துல் சமது அவர்களின் அருமையான சொற்பொழிவும் நம் சமுதாயத்தின் பழுதுநீக்கும் நிகழ்ச்சிகளாகத் திகழ்ந்தன.

 வருடம் தின்று  வயது வளர்ந்துகொண்டிருக்க, இன்னமும் குர்ஆனை சரியாக ஓதத் தெரிந்திருக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக அமைந்த நிகழ்ச்சியாக சகோ. கஸ்ஸாலி அவர்களின்குர்ஆன் ஓதும் பயிற்சிமுறை சிறப்பாக இருந்தது. குர்ஆனில் திரும்பத் திரும்ப இடம் பெற்றுள்ள சுமார் 100 சொற்களை நன்கறிந்து கொள்வதன் மூலம் அவை நாற்பதாயிரம் இடங்களில் ரிபீட்டாகும் போது உணர்ந்து ஓத முடியும் என்பதை நன்றாக மனதில் பதியவைத்தார்.  சிந்தனைக்கு விருந்தாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சிற்றுண்டி வடிவில் வந்தது இடைவேளை.

 இந்தக் குர்ஆன் எளிதானது என்று இறைவனே சொல்லியிருக்ககுர்ஆன் ஓதவும் விளங்கவும் சிரமமானதுஎன்ற மனப்பான்மையை  நமக்குள் ஏற்படுத்துகிற மனிதகுல விரோதியான  சைத்தானிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.

 ஒன்பது மணிநேரத்துக்கான இவ்வகுப்பை மூன்றாகப் பிரித்து நாளொன்றுக்கு மூன்றுமணிநேரமாக வாரத்தின் மூன்று தினங்கள் நடத்தப்படும்என்றும் சொன்னார் – “வகுப்பில் சேர விருப்பம் இருப்பவர்கள் மவுலவி அப்துல்லாஹ்விடம் பெயர் பதிவு செய்து கொள்ளுங்கள்“.

 பேராசிரியர். அப்துல்சமது அவர்களின் உரையை ஒருசில முறை தொலைக்காட்சியில் கேட்டிருந்தாலும் நேரடியாக இதுவே முதல் முறை.

  (I E D C)  இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் என்கிற; நானும் அங்கம் வகிக்கிறஎங்கள் உள்ளூர்(பரங்கிப்பேட்டை) அமைப்பின் அழைப்பின் பேரில் ஈத்மிலன் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் வந்து அருமையான சொற்பொழிவாற்றியதாக ஊர் நண்பர்கள் என்னிடம் நினைவு கூர்ந்திருந்தமையால் பேராசிரியரின் உரை பற்றி எனக்குள் எதிர்பார்ப்புகள் நிரம்பியிருந்தன. கொஞ்சம் கூட அதில் ஏமாற்றம் தராமல், எதிர்பார்ப்புக்கும் மேலாகவே பேராசிரியர் தனது சிந்தனை வளம் மிக்க பேச்சால் கேட்டோர் மனதைக் கவர்ந்தார்.  ஜோடனைகளில்லாத ஈடுபாடான எளிய பேச்சுஅண்ணலார் விரித்த அறிவு வானம்என்ற தலைப்பில்.

 பேராசிரியருடைய பேச்சின் முதன்மைக் கருத்தாகஉணர்ச்சி வசப்படாமல், அறிவு வசப்படவேண்டும்என்கிற செய்தி இருந்தது.

 கோப உணர்ச்சிகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திட்ட எதிரியையும் அறிவுபூர்வமாக எதிர்கொள்ளும் விதத்தை அனஸ் (ரலி) என்கிற தம் அன்புப் பணியாளருக்கு நபியவர்கள் இனிமையாகக் கற்றுத்தந்த நிகழ்வையும் நபியவர்களின் தாம்பத்ய வாழ்வில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கோபப் பேச்சை தம் மௌனத்தின் மொழியைக்கொண்டே அழகாக உணரவைத்த வரலாற்றுச் சுவடு ஒன்றையும் சுட்டிய பேராசியரின் உரையில் என்போன்ற இக்கால இளைஞர்களுக்குப் பாடமிருந்தது. “ஒரு பக்கம் அர்த்தமில்லாத வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பாக இருக்கும்போது மறுபக்கம் தணிந்து இருக்கவேண்டும், அப்போது தான் தவறு உணரப்படும்“.

 நல்ல நாள், கெட்ட நாள் என்று அறிவுக்குப் பொருந்தாத வகையில் நாள்களைப் பிரித்துப் பார்க்க இஸ்லாம் கற்றுத்தரவில்லை, ஆயினும் மனிதனுக்கு நல்ல நாள் என்பது ஏதேனும் ஒரு சிறு அறிவையேனும் அவன் கற்றுக்கொள்கிற நாளேயாகும். என்று இஸ்லாம் சொல்வதை எடுத்துக்கூறினார்.

 யமன் தேசத்துக்கு ஆளுநராக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நியமித்து வழியனுப்பிய நபியவர்களின் அறிவுரையிலிருந்து அறிவுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை  விவரித்தார்.

 வலக்கையால் உண்பதில், உணவுப்பொருளை முழுவதுமாக கடித்துண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிட்டுத்தின்பதில், கோபம் வரும்போது நிலைமாற்றிக்கொள்வதில் என்று நபி(ஸல்) அவர்களின் நுண்ணிய வழிமுறைகளும் இயல்பாகவே அறிவின் நுட்பச்செறிவுகளாக இருப்பதை எளிமையாக விளக்கிய பேராசிரியர், அண்ணலாரே அறிவொளி இயக்கத்தின் தொடக்கமாக அமைந்ததையும் விளக்கினார். “போர்க்கைதிகளிடமிருந்து கல்வியை; கற்றுத்தருவதை பிணையாகப் பெற்று அறிவொளியைத் தொடங்கிவைத்தவர்கள் அண்ணலாரே“. திண்ணைத்தோழர்கள் என்கிற வரலாற்று ஆளுமைகளால்மாலைநேரப்பள்ளிக்கு அடித்தளமிட்டவர்களும் அண்ணலாரேஎன்று தமிழன்பன் முன்பொருமுறை சொல்லியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது.அறிவொளி இயக்கத்தில் தன் பணி சார்ந்த ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார் .

 கண்களை; முகத்தைப் பார்த்துப் பேசுவதென்பது இன்றைக்கு ஆளுமை மேம்பாட்டின்; மனித வளக்கோட்பாட்டின் பயிற்சியாக இருக்கலாம். நபி(ஸல்) அவர்களின் இயல்பு படி அது முஸ்லிம்களுக்கு வாழ்வியல் நெறியாகவே (சுன்னத்தாக) 1400 ஆண்டுகளாக இருப்பதையும் அனஸ்(ரலி)அவர்களின் ஓர் அறிவிப்பின்வழியாக நினைவூட்டினார்.  ஜும்ஆ மேடைகள் சும்மா மேடைகளாகப் போவதுபற்றிய ஆதங்கமும் அப்பேச்சிலிருந்தது.

 தாய்ப்பால் பூரணமாக இரண்டுஆண்டுகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று குர்ஆனின் வசனமொன்றை மேற்கோள் காட்டிதாய்ப்பால் கொடுப்பதால் அழகு கூடுமே தவிர குறையாதுஎன்பதை விஞ்ஞான கண்ணோட்டத்தில் விளக்கினார். “தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு,  கருப்பையின் சுருங்கும்திறன் அதிகம், மேலும் தாய்ப்பால் கொடுக்கும் காலம் இயற்கையாகவே கருத்தடைக்காலமாகக் கருதப்படுகிறது“.

 மக்கள்தொகைப் பெருக்கம் என்பது ஒரு பிரச்னையாக பார்க்கப்படுவதைக் காட்டிலும், மனிதவளத் (Shortage of Manpower) தட்டுப்பாட்டுக்கு வித்திட்டு உறவுகள் என்ற சொல் அர்த்தமிழக்கும் அபாயத்தை சில ஐரோப்பிய நாடுகளை உதாரணங்கூறி விளக்கினார்.

 குர்ஆனுக்கு விளக்கம் காலந்தோறும் மனிதனுக்குக் கிடைக்கும் புதிய அறிவுகளால் மேம்பட்டுவருவதைதிருப்பியனுப்பும் வானத்தின் மீது சத்தியமாகஎன்கிற வசனத்தை முன்வைத்து விளக்கினார். சுப்ஹானல்லாஹ். ஓசோன் படலங்கள் விளங்கப்படாத காலக்கட்டத்தில்அன்றைய அறிஞர்களுக்குவானம் மழையைத்தான் திருப்பி அனுப்புவதாகவிளங்க முடிந்தது. இன்றைக்குத் தான் தெரிகிறது எத்தனையெத்தனை கதிர்வீச்சுகளை அது வடிகட்டித் திருப்புகிறது என்பதுவும்“.

 குர்ஆனின் வசனச் சுட்டல்களைப் பற்றிய சொற்ப அறிவையே கொண்டுசுனாமி போன்ற இயற்கைச்  சீரழிவுகளை இறை பயங்கரவாதமாக கணக்குக் காட்டுகிறஅறிஞர்களைஒரு பிடி பிடித்தார்.

 மனிதன் இயற்கையைச் சீரழித்து வருவதன் பதிலடி அது, இறைவன் மீது பழி போடாதீர்கள்

 நிலப்பரப்பை அதன் ஓரத்தில் குறைத்துக்கொண்டு வருவதை குர்ஆன் குறிப்பிடுவதைச் சுட்டி பருவம் தவறிய தட்பவெப்பத்திற்கு காரணமான குளோபல் வார்மிங்  மனிதனாலேயே, அவனுடைய சமச்சீரற்ற செயல்களாலேயே ஏற்படுவதை உணர்த்தினார்.

 முத்தாய்ப்பாகநாம் எப்படி இருக்கிறோம்?” என்ற ஆழ்ந்த வினாவை எழுப்பி கலாசாரச் சீர்கேடுகளால் கிரிக்கெட் மேட்சைக்கூட தொ.காவில் பார்க்க இயலாத சூழலாக விளம்பரங்களின் பெயரால் பரப்பப்படும்விசம்பரங்களை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

 கல்யாணத்துக்கும் மவுத்துக்கும் தான் ஜமாஅத் என்று ஆகிவிடாமல் தன் ஊராரின் / சமுதாயத்தினரின் கல்விநிலைக் குறித்துக் கவலைப்படுகிற ஜமாஅத்துகள் அமைய வேண்டும் என்கிற ஆதங்கத்தை அழுத்தமாக வெளியிட்டார்.  நன்றாகப் படிக்கின்ற ஒரு மாணவன் வறுமையாலோ சிறுமையாலோ பாதியிலேயே படிப்பை நிறுத்திடுவானாயேனால் அதற்காக அந்த ஜமாஅத் வெட்கப்பட வேண்டும்” .

 இந்திய முஸ்லிம்களின் அவலத்தைப் படம் பிடித்துக்காட்டிய நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கையை நினைவுபடுத்திய பேராசிரியர்ஊர் ஜமாஅத்துடன் உட்கார்ந்து பேசுங்கள்என்று வெளிநாடு வாழ் தமிழ்முஸ்லிம்களை அர்த்தமுடன் கேட்டுக்கொண்டு தன் உரையினை நிறைவு செய்தார்.

 பொன் போன்ற சிந்தனைகளை விதைத்த இந்த வெள்ளிக்கிழமை வீணில் கழியவில்லை என்ற எண்ணத்தின் திருப்தியுடன் மக்கள் வீடு திரும்பினர். சமுதாய அர்ப்பணிப்பு உணர்வு நிரம்பிய தஃபர்ரஜ் அமைப்பினரின் அயராத உழைப்பிற்குப் பின்னும், அவர்களையும் மீறிய சிறு குறைகள் ஒன்றிரண்டு இருக்கவே செய்தன என்றாலும் அவை அனுபவக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளத்தக்கவையே!

 உயர்வான இச்சிந்தனைகளை செயல்வடிவப்படுத்த முயற்சி எடுப்போமாகஇன்ஷா அல்லாஹ்.

 

 நன்றி:
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian. blogspot. com
www.mypno.blogspot. com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: