”ஓட்டம்… ஓட்டம்… ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!” – அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ‘பர்தா பயங்கரவாதப் பெண்’ என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.
”பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் ‘அந்த பர்தா பொண்ணு!’ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!” – வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.
ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். ‘சங்கீதா’வா இருந்த நான் ‘ஆயிஷா’ ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். ‘எப்படியும் பொழச்சுக்கலாம்’னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் ‘அல்உம்மா’ அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இஸ்லாம் | குறிச்சொற்கள்: ஆயிஷா, சங்கீதா

