மீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவுக்குள் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் நீண்ட இஸ்ரேலிய பிரிவினைச் சுவரும் மறுபக்கம் எகிப்திய செக்போஸ்ட் அடைப்பும் இருக்க, மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, குண்டுகளைப் பொழிந்ததற்குச் சமமாக சுமார் 16க்கும் மேற்பட்ட எஃப்16 ரக யுத்த விமானங்களின் மூலம் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து “கஸ்ஸா ஆட்சியாளர்களை அழிப்பதாக”க் கூறி வெறியாட்டம் ஆடியிருக்கிறது. எல்லா மருத்துவமனைகளும் இறந்துபோன உடல்களாலும் படுகாயமுற்று உயிருக்குப் போராடும் ஃபலஸ்தீன் மக்களால் நிறைந்து விட்டன. [இஸ்ரேலின் அத்துமீறல்கள் பற்றி அறிய சத்தியமார்க்கம்.காம் தேடல் பகுதியைக் காண்க]
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவினுள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்திலிருந்து வந்த மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு ட்ரக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழித்தது. காயமுற்றவர்களின் காயங்களுக்கு இடுவதற்குப் போதிய மருந்தின்றி மருத்துவமனைகளில் காயங்களுடன் ஃபலஸ்தீனியர்கள் அலறித் துடித்தவாறு உள்ளனர்.
மத்தியக் கிழக்கில் 40களின் இறுதியில் ஆரம்பித்த இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற இத்தகைய அட்டூழியங்கள், தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கவும் போராடவும் செய்கின்ற இக்காலகட்டத்திலும் ஃபலஸ்தீனியர்களின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத்தில் எவ்விதத் தொய்வும் இல்லாமல் தொடர்கின்றது.
அப்பாவி ஃபலஸ்தீன் மக்களின் மீது இஸ்ரேலின் நாசகாரப் படைகள் குண்டுமழை பொழிந்து நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனரைக் கொன்றொழிக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு, ஒன்றுக்கும் உதவா அறிக்கைகளை வெளியிடும் உலக நாடுகளும் அரபுச் சோற்றுப் பண்டாரங்களும் இம்முறையும் வெற்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மெக்டொனால்டின் ருசியையும் இஸ்ரேலின் கோலாவையும் ருசித்துப் பருகி, கூடிக் குலாவிப் பிரியும் அரபுலீக், இன்று புதன்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது. வழக்கம் போன்று ஒரு வெற்று அறிக்கையினை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.
இஸ்ரேல் செய்யும் அனைத்து மனிதவிரோத பயங்கரவாதங்களுக்கும் சுக்கான் பிடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செருப்பைத் தொடக்கூட தைரியம் அற்ற ‘ஐக்கிய நாடுகள் சபை’ என்ற பெயரைத் தாங்கியுள்ள அமெரிக்க நாடுகள் சபையின் செயலர் பேங்கிமூன் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக அடக்கமாகத் திருவாய் மலர்ந்துள்ளார்.
தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களில் ஒன்றைக்கூட மதிக்காமல், தொடர்ந்து அராஜகத்தில் தெனாவெட்டாக ஈடுபட்டு வரும் உலகின் ஒரே நாடு இஸ்ரேலாகும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏதாவது ஓர் ஏழைநாடோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் தென் அமெரிக்காவின் ஏதாவது ஒரு நாடோ இதுபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மதிக்காமல் இருந்திருந்திருந்தால், அதற்கு ஆயிரம் பொருளாதாரத் தடைகளும் அமெரிக்கப் பெரியண்ணனின் வல்லூறுப் படைகளின் படையெடுப்புகளும் நிகழ்ந்திருக்கும்.

