“பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.
கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்‘ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க” என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார்.
பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?
“எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க” என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு. ஏழ்மையான குடும்பம். கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.
பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கிய சொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம்

